tamilnadu

img

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தடைக்கு கண்டனம்

ஜூலை 17-ல் மாநிலம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை,ஜூலை 15- கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்க தடை விதிக்கும் விவசாயிகள் விரோதச் செயலை கண்டித்து மாநிலம் முழுவதும் ஜூலை 17 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் 14 ஆம் தேதி காலை முதல் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதிவாளர் அவர்களிடமிருந்து வந்த குறுஞ்செய்தி அடிப்படையில் இது நிறுத்தப்பட்டிருப்பதாகவும் மறு உத்தரவு எப்போது வரும் என்பது தெரியாது என்றும் வங்கி கிளைச் செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்லாண்டு காலமாக விவசாயிகள் அவசரமான விவசாய பணிகளுக்கு நகையை அடமானம் வைத்து கடன் பெற்று வந்துள்ளனர். வேளாண் பணிகளை மேற்கொள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பணம் தேவைப்படும் இக்காலத்தில் நகைக்கடன் வழங்குவது தடை செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசின் இந்த செயல் விவசாயிகளை கந்துவட்டிகாரர்களிடமும், தனியார்  அடகு கடைக்காரர்களிடமும் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கு வதற்கு இட்டுச் செல்லும் என்பதை நானும் விவசாயி தான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் உணர வேண்டும். அதிலும், கடந்த நான்கு மாத காலமாக பொதுமுடக்கம் காரணமாக பெரும் சிரமத்திலிருக்கும் விவசாயிகளை மேலும் துன்பத்திற்குள்ளாக்குவதுடன், விவ சாயத்தை முடக்கும் செயல் இது என்பதை சுட்டிக்காட்டு கிறோம். தமிழக அரசின் விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து நகைக்கடன் வழங்க தடைவிதிக்கும் அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி ஜுலை 17 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

;